முக்கியச் செய்திகள் தமிழகம்

“கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எளிதாக கடத்தப்படும் குட்கா” – அமைச்சர்

“குட்கா பொருட்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை என்ற காரணத்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு மிக எளிதாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுகிறது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

“தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக செயல்படுவதை பார்த்து மத்திய அரசு கூடுதலாக வழங்கிய தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. WHO, IMCR அறிவுரைப்படி 70 சதவிகிதத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மூன்றாவது அலையை சமாளித்து விடலாம். விரைவில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் 70 சதவிகிதம் இலக்கை எட்டி விடுவோம்.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,

“குட்கா பொருட்கள் அதிகம் காய்கறி வண்டிகளில் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் அதனை ஒழிக்க தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஏராளமானோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா பொருட்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை என்ற காரணத்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு மிக எளிதாக குட்கா பொருட்கள் அதிகம் கடத்திவரப்படுகிறது.” என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக இதுவரை 62% விகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும், ஜிகா போன்ற புதிய நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார்

மேலும், 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நடப்பாண்டு 1,650 மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சோம்பேறிகளைத் தீவிரமாகத் தாக்கும் கொரோனா; ஆய்வில் தகவல்!

Saravana Kumar

டெல்லி போராட்டம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் கருத்து!

Nandhakumar

கேஜிஎப்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Halley karthi