குருநானக் கல்லூரியில் மோதல் விவகாரம்: 9 மாணவர்கள் கைது!

சென்னை வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவத்தில் 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் குருநானக் கல்லூரியில் மயிலாப்பூரைச் சேர்ந்த தனுஷ்…

சென்னை வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவத்தில் 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் குருநானக் கல்லூரியில் மயிலாப்பூரைச் சேர்ந்த தனுஷ் என்பவர் 3-ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வந்தார். அதே கல்லூரியில் தாவரவியல் படிக்கும் மாணவர்கள் கடந்த 18-ம் தேதி கானா பாட்டு பாடியதாகவும், அதனை தனுஷ் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தாவரவியல் பிரிவு மாணவர்கள், தனுசை தாக்கியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு வந்த தனுஷ், தன்னை தாக்கிய தாவரவியல் பிரிவு மாணவர்களை நோக்கி 2 பட்டாசுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கிண்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் மாணவர்களிடையே நடந்த மோதலில் கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசை பயன்படுத்தியதாகவும், அங்கு கத்தி எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் சென்னை காவல்துறை விளக்கம் அளித்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான மாணவர் உள்பட மோதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 18 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும் இந்த மோதல் தொடர்பாக 12 மாணவர்கள் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும்  3 மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.