முதலிடத்தில் நீடிக்கும் குஜராத் அணி – சென்னையை வீழ்த்தி வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.    ஐபிஎல் 15வது சீசனில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. 

 

ஐபிஎல் 15வது சீசனில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய மொயின் அலி நன்றாக தொடங்கிய நிலையில், அவரும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் நிலைத்து ஆடினார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெகதீசனும் நன்றாக ஆடினார். அரைசதம் அடித்த ருதுராஜ், 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய தோனி உள்ளிட்ட வீரர்களும் சிறப்பாக விளையாட வில்லை. இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.


134 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் கில் 18 ரன்னிலும், மேத்யூ வேட் 20 ரன்னிலும் ஹர்திக் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடிய ரிதிமான் சஹா அரைசதம் அடித்தார். இலக்கு எளிதானது என்பதால் அவசரப்படாமல் கடைசி வரை நிதானமாக நின்று விளையாடிய சஹா, போட்டியை முடித்து கொடுத்தார். 20வது ஓவரில் இலக்கை அடித்து குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஹா 57 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார்.

இந்த தொடரில் 10வது வெற்றியை பெற்ற குஜராத் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மற்றுமொரு தோல்வி ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.