குஜராத் தேர்தல்: பாஜக முன்பு உள்ள சவால்கள், சாதகங்கள் என்ன?

  குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நாடெங்கிலும் உற்றுநோக்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவின் முன் உள்ள சவால்கள் மற்றும் அக்கட்சிக்கு சாதகமாக உள்ள அம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் அலசுவோம். குஜராத் தேர்தல்…

 

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நாடெங்கிலும் உற்றுநோக்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவின் முன் உள்ள சவால்கள் மற்றும் அக்கட்சிக்கு சாதகமாக உள்ள அம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் அலசுவோம்.

குஜராத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுவது ஏன்?

வழக்கமாக 5 அல்லது அதற்கும் மேற்பட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும்போதுதான் அது மினி நாடாளுமன்ற தேர்தலாக பார்க்கப்படும். ஆனால் குஜராத் என்கிற ஒற்றை மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் நாட்டையே திரும்பி பார்க்க வைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமா? என விவாதிக்கப்படும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முக்கிய காரணம், நாடு தழுவிய அளவில் நவீன பாஜகவின் முகங்களாக விளங்கும் பிரதமர் மோடி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். மேலும் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாடெங்கிலும் மோடி அலையை உருவாக்கியதில் குஜராத் மாடலை வைத்து மேற்கொள்ளப்பட்ட பரப்புரைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

சாதித்து காட்டுமா பாஜக?

இந்த முறையும் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றால் ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியாக 7 சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சி என்று மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் நிகழ்த்திய சாதனையை பாஜக சமன் செய்யும். இந்த சாதனை ஏற்படுத்தும் பிரம்மிப்பே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு நாடு தழுவிய அளவில் பெரிய விளம்பரமாக அமையும். அதே நேரம் மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், அந்த தோல்வி  பாஜகவின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக நாடு முழுவதும் ஒரு பிம்பத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்கிற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. இப்படி பல்வேறு காரணங்களால் கிட்டதட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு இணையான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவிற்கு உள்ள சாதக பாதகங்கள் என்ன என்று அலசுவோம்.

பாஜக முன் உள்ள சவால்கள்

1. நீண்ட காலம் தொடரும் ஆட்சி

குஜராத்தில் கடந்த 1998ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு கடந்த ஆட்சிதான் காரணம் என்று மட்டுமல்ல கடந்த கால ஆட்சிகள்தான் காரணம் என்றுகூட சொல்ல முடியாத அளவிற்கு திரும்பி பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு பாஜகவின் ஆட்சியே நடைபெற்று வந்துள்ளது.  எனவே தேர்தல் பரப்புரைகளில் எதிர்க்கட்சிளின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்காது, தங்களது அரசின் சாதனைகளை முன்னிறுத்தியே மக்களிடம் பாஜக வாக்குசேகரிக்க வேண்டியிருக்கும்.

மேலும் ஒரே கட்சியின் ஆட்சியை தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் பார்த்ததால் சலிப்பு ஏற்பட்டு மக்கள் மாற்றத்தை விரும்பும் சூழல் இயல்பாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஆளுங்கட்சி மீதான அதிருப்தியும் தலைதூக்கலாம். இதனை எப்படி இந்த தேர்தலில் பாஜக சமாளிக்கப்போகிறது என்ற கேள்வியையும் அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றன. 2002ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில் 127 இடங்களில் பாஜக வென்றது. ஆனால் அதன் பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைந்து  கொண்டே வந்திருக்கிறது.   2007ல் 117 இடம்,  2012ல் 116 இடம் என சரிந்த வெற்றியின் அளவு 2017ம் ஆண்டில் 99 இடமாக சுருங்கியதையும் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியின் வெளிப்பாடாக எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

2. வலுவான தலைமை

குஜராத்தில் கடந்த 2001ம் ஆண்டு தொடங்கி கிட்டதட்ட 14 ஆண்டுகள் முதலமைச்சர் பதவிக்கு அடுத்து யார் என்கிற பேச்சே எழ முடியாத அளவிற்கு அந்த அரியணையில் யாராலும் அசைக்க முடியாத நபராக அமர்ந்திருந்தார் நரேந்திர மோடி. ஆனால் அதே பாஜக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி, புபேந்திர பால் படேல் என 3 முதலமைச்சர்கள் மாறிவிட்டனர். இதனைச் சுட்டிக்காட்டும் அரசியல் ஆய்வாளர்கள் மோடியும், அமித்ஷாவும் தேசிய அரசியலில் பிசியாக இருக்கும் நிலையில் அவர்களின் இடத்தை நிரப்பும் அளவிற்கு வசீகர தலைமை குஜராத் பாஜகவில் இல்லாததும் அக்கட்சிக்கு இந்த தேர்தலில் ஒரு சவாலாக உள்ளதாகக் கருதுகின்றனர்.

3.  மின் கட்டணம் 

பிற மாநிலங்களைவிட அதிக அளவு மின் கட்டணம் குஜராத்தில் இருப்பது அம்மாநில மக்களிடையேயும் தொழில்துறையினரிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் யூனிட்டுக்கு 4 ரூபாய் மட்டுமே செலுத்தும்போது நாங்கள் ரூ.7.50 செலுத்துகிறோம் என அதிருப்தி தெரிவிக்கிறார்கள் தெற்கு குஜராத் தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள். மின் கட்டண விவகாரத்தில் மக்களிடையே நிலவும் அதிருப்தியை புரிந்துகொண்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் தருவோம் என்கிற வாக்குறுதியை முன்வைத்து பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.

4. தண்டனை குறைப்பு

2002ம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரத்தின்போது அம்மாநிலத்தில் உள்ள ராந்திக்பூர் கிராமத்தைச்சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர்  வன்முறை கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் அந்த வன்முறை கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் சிறை அனுபவித்து வந்த 11 பேர் சமீபத்தில் தண்டனை குறைப்பு செய்யப்பட்டு சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். 14 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசத்திற்கு பின்னரே விடுதலை செய்யப்பட்டனர் என விளக்கம் அளிக்கப்பட்டாலும், குஜராத் பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள்  மேற்கொள்ளும் பரப்புரைகள் பாஜக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

5. இடிந்து விழுந்த பாலம்

குஜராத்தின் மோர்பி நகரில் கடந்த 30ந்தேதி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 130 பேர் பலியான சம்பவம்  அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒப்பந்ததாரர் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததே இந்த விபத்திற்கு காரணம் என சர்ச்சை எழுந்துள்ளது. அரசு ஒப்பந்தங்களை ஒப்பந்ததாரர்களுக்கு அளிப்பதில் நிலவும் ஊழலின் வெளிப்பாடே இந்த விபத்து என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவமும் சட்டசபை தேர்தல் நேரத்தில் குஜராத் பாஜக அரசுக்கு பெரும் தர்மசங்கடமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

6. விவசாயிகள் போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கவில்லை என்று கூறியும், புல்லட் ரயில், எக்ஸ்பிரஸ் வே உள்ளிட்ட திட்டங்களுக்காக கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறியும் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே விவசாயிகளை கவர பாஜக என்ன திட்டம் வைத்துள்ளது என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.

7. ஆம் ஆத்மி

டெல்லி, பஞ்சாப் என தாங்கள் குறி வைக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப்பிரம்மாண்டடான வெற்றியை வாரிக் குவித்து வரும் ஆம் ஆத்மி அடுத்து குறிவைத்திருப்பது  குஜராத்தை. ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்கள் முன்பிருந்தே குஜராத்தில் முகாமிட்டு பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். குஜராத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் வியூகங்களை இதற்கு முன் பலமுறை தோற்கடித்து காட்டியுள்ளது பாஜக. அக்கட்சியை எதிர்கொள்வது ஒன்றும் பாஜகவிற்கு புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆம் ஆத்மி மிகுந்த வீரியத்தோடு மேற்கொள்ளும் பரப்புரைகளும் அதன் தேர்தல் வியூகங்களும் குஜராத் பாஜகவை பொறுத்தவரை புதிதான ஒன்றுதான். எனவே ஆம் ஆத்மியின் அதிரடி வருகையும் பாஜகவிற்கு ஒரு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

பாஜகவிற்கு சாதகமான அம்சங்கள் என்ன?

1.மோடி எனும் மந்திரம்

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரை இந்திய பிரதமர் மோடியால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என உலக நாடுகளின் தலைவர்கள் கூறும் அளவிற்கு சர்வதேச அரங்கில் செல்வாக்கு பெற்றவராக திகழ்கிறார் நரேந்திர மோடி. இந்நிலையிவ் அவரது சொந்த மாநிலத்தில் மோடியின் செல்வாக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. மோடி அலை நாட்டின் பிற மாநிலங்களில் ஏறலாம் இறங்கலாம். ஆனால் குஜராத்தில் மட்டும் அது சுனாமியாக நிலைகொண்டேயிருக்கும். பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்திருந்தாலும் குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு அரசியல் நிபுணர்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள் என்றால் அதற்கு பிரதமர் மோடிக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் இருக்கும் அபரிமிதமான செல்வாக்குதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 2.வளர்ச்சி திட்டங்கள் 

மத்தியிலும், மாநிலுத்திலும் ஒரே கட்சி ஆட்சி என்பதால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை என்ஜின் பொறுத்தப்பட்ட வாகனமாக சீறிப் பாய்ந்து ஏராளமான வளர்ச்சித்திட்டங்கள் குஜராத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாஜகவினர் பெருமிதத்தோடு கூறுகின்றனர். கடந்த மாதம் குஜராத்தில் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசும்போது, குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை எண்ணிப் பார்ப்பதே கடினம் என பெருமை பொங்க கூறினார். இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி மையமாக குஜராத்தை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட ஆத்மநிர்பார் குஜராத் திட்டம்,  நீர் நிலை மேலாண்மைக்காக கடந்த 24 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அணைக்கட்டுகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு பாஜகவினர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.  உள்கட்டமைப்பு வசதிகள், தனி நபர் வருமானம் உள்ளிட்டவற்றில் குஜராத் முன்னணியில் உள்ளதையும் துண்டு பிரசுரங்களாக விநியோகித்து அவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.  அகமபதாபாத், மும்பை இடையே அதிகவேக புல்லட் டிரெய்ன் திட்டம் போன்றவற்றையும் பாஜகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

3.மோடி, அமித்ஷா பரப்புரை

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே பல முறை குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசியுள்ளனர். அவர்களது பரப்புரைகள் குஜராத் பாஜகவினருக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு குஜராத்தில் பிரதமர் மோடி அடிக்கல்நாட்டியுள்ளார். மேலும் நிறைவுற்றபட்ட திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். அகமதாபாத், ராஜ்கோட், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரதமர் மேற்கொண்ட வாகன பேரணிகளும் பொதுமக்களை வெகுவாக உற்சாகப்படுத்தியது.   மேலும் பல்வேறு மாநிலங்களில் அமித்ஷாவின் தேர்தல் வியூகங்கள் பாஜகவிற்கு வெற்றிமேல் வெற்றி கொடுத்த நிலையில் அவரது சொந்த மாநிலத்தில் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என பாஜகவினர் நம்பிக்கையோடு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

4. இந்துத்துவா உணர்வு

குஜராத்தில் தற்போதும் தலைத்தோங்கியிருக்கும் இந்துத்துவா உணர்வும், அதனை மையப்படுத்தி சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் பரப்புரைகளும் அம்மாநிலத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்றும் என்கிற கருத்தையும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

5.கருத்துக்கணிப்புகள்

தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை  பிடிக்கும் என்றே கூறுகின்றன. ஏபிபி சி- ஓட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்புகள் பாஜக இந்த முறை 131 லிருந்து 139 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என கணித்துள்ளது. இதனால் குஜராத்தில் தொடர்ச்சியாக 7வது சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெல்லும் என்கிற உற்சாகம் அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

6. உள்ளாட்சி தேர்தல் வெற்றி

கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் குஜராத்தில் உள்ள 7 மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றியது. மேலும் 75 நகராட்சிகளில் 74 நகராட்சிகளை கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.  உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாஜகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1ந்தேதி மற்றும் 5ந்தேதி இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொடர்ச்சியாக 7வது முறையாக வென்று பாஜக சரித்திரம் படைக்குமா என்பது டிசம்பர் 8ந்தேதி தெரிந்துவிடும்

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.