குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடையவுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத்துக்கு எப்போது தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,90,89,765. அதில் 100 வயது கடந்தவர்கள் எண்ணிக்கை 10,460 ஆக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 9,87,999 ஆகவும், முதல்முறை வாக்காளர்கள் 4,61,494 ஆகவும் உள்ளனர். வாக்காளர்களில் ஆண்கள் 2,53,36,610 பேர், பெண்கள் 2,37,51,738, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 1417 ஆவர்.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குஜராத்துக்கு டிசம்பர் 1ம் தேதி முதல் கட்ட தேர்தல், 5ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். முதல் கட்டம் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 14. வேட்புமனு பரிசீலனை நவம்பர் 15ம் தேதி நடைபெறும். வேட்பு மனு திரும்பப்பெற கடைசிநாள் நவம்பர் 17 ஆகும்.
அதுபோலவே இரண்டாம் கட்டம் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 17, வேட்புமனு பரிசீலனை நவம்பர் 18, வேட்பு மனு திரும்பப்பெற கடைசிநாள் நவம்பர் 21 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51,782 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இரண்டு கட்டங்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.







