சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊர்வன விலங்குள் குறித்து அறிந்துகொள்ளத் தொடங்கப்பட்ட ‘சென்னை பாம்பு பண்ணை’ கொரோனா ஊரடங்கு காரணமாகப் பார்வையாளர்கள் இல்லாத காரணத்தால் வருமானமின்றி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சென்னை பாம்பு பண்ணை அறக்கட்டளை அல்லது கிண்டி பாம்பு பூங்கா ஊர்வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கல்விக்காக 1972-ம் ஆண்டு உரோமுலசு விட்டேக்கர் என்பவரால் தொடங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பூங்காவில் முதலை, உடும்பு, ஆமை, பாம்பு வகைகள், பச்சோந்தி உள்ளிட்ட முக்கியமான ஊர்வன விலங்குகள் உள்ளன. இந்த அறக்கட்டளையில் நச்சுப் பாம்புகள் மற்றும் நச்சற்ற பாம்புகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதுடன் பாம்புகளிடமிருந்து மருத்துவப் பயன்பாட்டிற்காக நச்சுகள் சேகரிக்கப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள சென்னை பாம்பு பண்ணை தற்போது கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே மூடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஓராண்டுக்கு மேல் பாம்பு பண்ணை மூடப்பட்டுள்ளதால் அங்குள்ள விலங்குகளைப் பராமரிப்பு மற்றும் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிர்வாக தலைவர் எஸ். பால்ராஜ் கூறுகையில், “கொரோனாவுக்கு முந்தை நாட்களில் கிண்டி பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களுக்கு ஏற்ப அதிகமாகவும் கணிசமாகவும் இருக்கும். இதன்காரணமாக பூங்காவின் ஆண்டு வருமானம் ரூபாய் 75 லட்சமாக இருந்தது. ஒரு மாதத்திற்குப் பார்வையாளர்களின் வருகைக்கு ஏற்ப ரூ.6.5 லட்சம் முதல் ரூ. 7லட்சமாக இருக்கும். இதில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 4 லட்சமும் விலங்குகளுக்கு உணவுகளை வாங்க ரூபாய் 2 லட்சமும் செலவு செய்யப்படும்.
ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓன்றரை ஆண்டாகப் பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. பூங்காவைப் பராமரிக்க வைத்திருந்த சேமிப்பு தொகையும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு இந்த நெருக்கடியைச் சமாளிக்க சில தன்னார்வலர்கள் உதவினார்கள். அவர்களுடைய உதவியால் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் விலங்குகளுக்கு உணவு வாங்க முடிந்தது. ஆனால் தற்போது நிலைமை மோசமாகிவிட்டது.
பூங்காவில் தற்போது கங்கை நதியைச் சேர்ந்த கரியல் முதலைகள், மலைப்பாம்புகள் கருவுற்றுள்ளன. ஆனால் இந்த விலங்களுக்கு போதிய பாதுகாப்பும், ஊட்டச்சத்தான உணவு வழங்கக்கூட நிதியில்லாமல் உள்ளோம்” என்கிறார் பால்ராஜ்.
தற்போது கிண்டி பூங்காவில் 20 அரியவகை பாம்புகள், மூன்று வகையாக முதலைகள், காட்டுப் பல்லி, ஆமை உட்பட 300 வகையான ஊர்வன விலங்குகள் உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாகப் பாம்பு பண்ணை அறக்கட்டளையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையும் ஊதியத்தையும் குறைக்க அறக்கட்டளை சார்பில் முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அதிகளவு கவனம் ஈர்த்த கிண்டி பாம்பு பூங்காவை மீண்டும் உயிர்ப்புடன் செயல்படவைக்கத் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் நிதியுதவி அளிக்க முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் பால்ராஜ்.