குரங்கம்மை நோய்க்கு வழிகாட்டு நெறிமுறைகள்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.   மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்ச்சல்…

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.

 

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்ச்சல் மற்றும் உடலில் கொப்பளங்கள் ஏற்படுவது குரங்கு அம்மையின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2 முதல் 4 வாரங்கள் அறிகுறிகள் இருக்கும் என்றும், 1 முதல் 10 சதவீதம் வரை உயிரிழப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதரிடம் பரவுவது போல், மனிதர்களிடம் இருந்து மனிதர்களிடமும் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பை முழுவதுமாக உணர 21 நாட்கள் வரை ஆகலாம் என்றும், அதன் பின்னரே, குரங்கு அம்மை பரவத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் பயணம் செய்தவர்களை பரிசோதிக்க வேண்டும் என்றும், குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அறிகுறிகள் இருப்பவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட தோல் பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது விவரங்களை மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து பொது சுகாதாரத்துறை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அனைத்து தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது.

ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், 21 நாட்களாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் கண்டறியப்படும் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடற்சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.