உத்தரகாண்ட், தேராதூன் பகுதியில் 15 அடி உயரத்தில் பனியிலும் அயராது பணி செய்யும் காவலர்களின் வீடியோவை இந்தோ திபெத்திய காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் பகுதியாக தேராதூன் இருக்கிறது. இங்குள்ள மலைப்பகுதியில் அப்பகுதியின் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அப்படி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள் 0 டிகிரி குளிர் நிலவும் நேரத்திலும் அயராது உழைக்கின்றனர்.
இது தொடர்பான வீடியோவை இந்தோ திபெத்திய போலீஸார் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த விடியோவில், காவலர்கள் தங்களது துப்பாக்கிகளை முதுகில் சுமந்துகொண்டு, முட்டளவு நிறைந்துள்ள பனியில் நடந்துசெல்கின்றனர். ஒவ்வொரு அடி எடுத்துவைக்கவும் மிகுந்த சிரமம்ப்படும் காவலர்கள் எந்த ஓய்வும் இல்லாமல் நடந்து செல்கின்றனர். மேலும் கயிறு ஒன்றின் உதவி மூலம் தொடர்ந்து பயணிக்கும் காவலர்கள் 15 அடி உயரத்தில் நிற்காமல் ரோந்து பணியில் ஈடுபடுவது எத்தகைய சவாலான பணி என்பதை விளக்குகிறது.
காவலர்கள் வெளியிட்ட பதிவில், “பயணம் கடினமாகும் போது, அந்த கடினத்துடனே சேர்ந்து பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர். 15 ஆயிரம் அடி உயரத்தில் 0 டிகிரி வெப்பநிலையில் அயராது உழைக்கும் இந்த காவலர்களின் பணி என்றுமே ஈடுகட்ட முடியாதது என்கின்றனர் சாமானியர்கள்.








