குரூப் 4 தேர்வு; வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்

குரூப் 4 தேர்வுக்கு கால தாமதமாக சென்ற மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக…

குரூப் 4 தேர்வுக்கு கால தாமதமாக சென்ற மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட  7,301 குரூப் 4 பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள்ளாகத் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் என்றும், ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் எடுத்துவரக்கூடாது என்றும் முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் குருப் 4 தேர்வினை 9.05 மணிக்கு தேர்வு எழுத வந்தவர்களை உள்ளே அனுமதிக்காததால் தேர்வர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து பள்ளி கேட்டினை தள்ளி உள்ளே செல்ல முயற்சி செய்தனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதி உள்ள தனியார் பள்ளியில் 8:40 மணிக்கு தேர்வு எழுத வந்த வந்தவர்களை உள்ளே அனுப்பாமல் 20 மேற்பட்டோரை தேர்வு அதிகாரிகள் ஒரு மணி நேரமாக வெளியே நிற்க வைத்துள்ளனர். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தனியார் மேல்நிலைப் பள்ளியில் எழுத வந்த மாணவி , காலதாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் ஹால்டிக்கெட்டை பள்ளி நுழைவு வாயிலேயே கிழித்தெறிந்து சென்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு எழுத காலதாமதமாக வந்த 40க்கும் மேற்பட்டவர்களை உள்ளே அனுமதிக்காததால் மாணவர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.