குரூப் 2 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதமும், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே நடத்தி முடித்த தேர்வுகளுக்கான முடிவுகளை எப்போது…

குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதமும், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே நடத்தி முடித்த தேர்வுகளுக்கான முடிவுகளை எப்போது வெளியிடும் என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற குரூப்-2, 2ஏ, 4 உள்பட பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்று இருக்கின்றன.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 5,208
இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. குரூப் 2, 2ஏ தேர்வை எழுத 11,78,175 பேர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 9,94,890 பேர் தேர்வை எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகள் ஜூனில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த மாதம் முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7,301 இடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது.

குரூப் 4 தேர்வை 18,50,471 பேர் எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதேபோல் டிஎன்பிஎஸ்சி நடத்திய மேலும் 9 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.