விருத்தாசலம் அருகே மயான பாதையை ஆக்கிரமித்துள்ளதால் இருளர் சமுதாய மக்கள் இறுதி சடங்கு செய்ய மயானத்திற்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் குடியிருப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு அந்த குடியிருப்பின் அருகே உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் சுடுகாட்டிற்கான வழியினை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் சுடுகாட்டிற்கு செல்ல முடியாத அப்பகுதி மக்கள், அப்பகுதியில் இறப்பவர்களின் உடலை சுமந்து கொண்டு விருத்தாச்சலம் மணிமுத்தாற்றங்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வந்தனர்.
ஆனால் சுடுகாடு இருக்கும்போது ஏன் மணிமுத்தாற்றங்கரைக்கு வந்து அடக்கம் செய்கிறீர்கள் என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்ததால் அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் மயானப் பாதையை மீட்டு தர வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி மனைவி ரம்யா 27 என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
அவரது உடலை இறுதி சடங்குகள் முடித்தவுடன் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வது என அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி ஆக்கிரமிப்பு பாதையில் பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்ல எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மயான பாதையை மீட்டு தர வேண்டும் என கூறி ரம்யாவின் உறவினர்கள் விருதாச்சலம் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் சட்ட ஒழுங்கு ஏற்படாமல் தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் போலீசார் முன்னிலையில் பிரேதத்தை ஆக்கிரமிப்பு பாதையில் இருந்த கரும்பு பயிர் இடையே பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்றனர். சுடுகாட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் விளைநிலத்தின் இடையே கரும்பு பயிர்கள் உள்ளே பிரேதத்தை கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.








