மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்சை முந்தி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி.
உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்புபடி, சுமார் 18,73,793 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் உலகின் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்
இரண்டாவது இடத்தை பிரான்சைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டு பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 12,44,665 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர், ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு சுமார் 11,50,336 கோடி ரூபாய்.
4வது இடத்தை இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானி பிடித்துள்ளார். அதானி குழும நிறுவனங்களின் தலைவரான கவுதம் அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 9,22,507 கோடி ரூபாய். ஒரு காலத்தில் நீண்ட நாட்கள் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக விளங்கிய பில்கேட்சை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் கவுதம் அதானி.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும் கவுதம் அதானியே. கடந்த 2 ஆண்டுகளாகத்தான் அவருடைய சொத்து மதிப்பு பெருமளவு உயர்ந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு கவுதம் அதானி வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. அந்த ஒரே ஆண்டில் மட்டும் சுமார் 3,91,706 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கவுதம் அதானிக்கு சேர்ந்தது. அதாவது வாரத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் என்கிற அளவிற்கு அவருக்கு செல்வம் சேர்ந்தது. இதன் மூலம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ளவர்கள் பட்டியலில் இணைந்த கவுதம் அதானி, தற்போது உலகின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலுக்குள் வந்துள்ளார். இந்தியாவின் மற்றொரு பிரபல கோடீஸ்வரரான முகேஸ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.







