ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத் திற்கு, அரசு எப்போதும் துணையாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு ஆதி திராவிடர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் கீழ் 123 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். மேலும், காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலக் குழு ஆகியவற்றை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனிடையே, “தலைநிமிரும் தமிழகம் – நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்” என்ற தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுப் பொறுப்பேற்று 100 நாட்களில் ஆற்றிய மக்கள் நலப் பணிகளைத் தொகுத்து, செய்தித்துறையின் சார்பில், இந்த சிறப்பு மலர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, தலைமைச் செயலாளர் இறையன்பு பெற்றுக் கொண்டார். இந்த சிறப்பு மலரில், முதலமைச்சர் அறிவித்த 100க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், களப் பணிகள், ஆய்வுப் பணிகள் மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்ட துறை வாரியான ஆய்வுகள் ஆகியவற்றுடன், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை” தொடர்பான செய்திகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.