அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.
ஆனால், தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 14 சதவீதம் உயர்த்தி வழங்கியது.
https://twitter.com/OfficeOfOPS/status/1587275447666020352
இதனை பின்பற்றி மாநில அரசு ஊழியர்களுக்கும் மேற்படி 14 சதவீத அகவிலைப்படி உயர்வு 01-07-2021 முதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை பின்பற்றாமல் 01-07-2021க்கு பதிலாக 01-01-2022 முதல் 14 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கியது. அதாவது 6 மாத கால அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
தற்போது, 01-07-2022 முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், வழக்கம்போல் தி.மு.க. அரசு வாய்மூடி மவுனியாக உள்ளது.
எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலம் தாழ்த்தி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.







