இலங்கை நிலவரம்–அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசு விளக்கம்

இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தற்போதைய அரசியல்…

இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்து விளக்குவதற்காக மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

 

 

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த கூட்டத்திற்கு 46 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், 28 கட்சிகள் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். மொத்தம் 38 தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு தரப்பில் தான், பிரகலாத் ஜோஷி, புருஷோத்தம் ரூபாலா உட்பட 8 அமைச்சர்கள் பங்கேற்று, இலங்கையின் நிலவரம் குறித்து விளக்கியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து அரசியல் ரீதியாகவும், வெளியுறவுக் கொள்கை கண்ணோட்டத்திலும் இரு வகையான விளக்கங்களை தலைவர்களுக்கு அளித்ததாகத் தெரிவித்த ஜெய்சங்கர், இலங்கையில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் நிலை என அனைத்தும் விளக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த ஆண்டு இந்தியா இதுவரை 3.8 பில்லியன் டாலர் உதவியை இலங்கைக்கு வழங்கியதாகக் குறிப்பிட்ட வெளியுறவுத் துறை அமைச்சர், வேறு எந்த நாடும் இந்த அளவு பொருளாதார உதவிகளை செய்யவில்லை என்றார்.

இலங்கைக்கு மேலும் எவ்வாறு உதவுவது, எவ்வாறு சர்வதேச நிதி அமைப்புகளிடம் இருந்து இலங்கை கடன் பெறுவதை எளிதாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலாவது ஏற்பட வாய்ப்பு உள்ளதா என பலர் கவலையுடன் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்த ஜெய்சங்கர், இந்த கேள்வியை தாங்கள் எதிர்பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் நிதி நிலை, மாநிலங்களின் நிதி நிலை, கடன் அளவு, அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் அளவு போன்ற பல்வேறு அம்சங்களை விளக்கும் விளக்கக் காட்சியை வெளியிடுமாறு மத்திய நிதி அமைச்சகத்திடம் ஏற்கனவே கோரி இருப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கையின் அதிபராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.