இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சி MP டல்லஸ் அல்லஹபெருமாவுக்கு சஜித் பிரேமதாசவின் சமாகி ஜன பலவேகயா ஆதரவு தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் வாக்களித்து புதிய அதிபரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, டல்லஸ் அல்லஹபெருமா, ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமார திஸ்ஸநாயகே ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். அதிபர் தேர்தல் போட்டியில் முக்கிய வேட்பாளராக இருந்த சஜித் பிரேமதாச, திடீரென இன்று போட்டியில் இருந்து விலகினார்.
இதனையடுத்து, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய சமாகி ஜன பலவேகயா கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமா பண்டார, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சியுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டல்லஸ் அல்லஹபெருமாவை ஆதரிக்க தங்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக டல்லஸ் அல்லஹபெருமா வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் கூறினார்.
டல்லஸ் அல்லஹபெருமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், அவர் தங்கள் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பார் என்றும் ரஞ்சித் மத்துமா பண்டார தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவை பிரதமராக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் தலைவரும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஜி.எல். பெரிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
டல்லஸ் அல்லஹபெருமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் பல கட்சி ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.










