செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி, அதனை நிறுத்தி வைத்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், அவர் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்த நிலையில், துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த ஜூன் 16ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29ம் தேதி
மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர், அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை
நிறுத்திவைப்பதாக தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு அறிவுறுத்தியுள்ளார். அட்டர்னி ஜெனரல் கருத்தையும் கேட்பது சரியானதாக இருக்கும் என்பதால் அவரை அணுகி கருத்து கேட்க உள்ளேன். செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவானது, என்னிடமிருந்து அடுத்து தகவல் தெரிவிக்கும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆளுநர் ஆர் என் ரவி நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருக்கிறார். அதோடு, 13 ஆம் தேதி சென்னை திரும்பும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த டெல்லி பயணத்தில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய முடிவுகளை ஆளுநர் எடுக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் ஆளுநரின் டெல்லி பயணம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகியுள்ளது.







