ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்றும், ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி சென்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :
“மேகதாதுவில் அணை கட்டப்போவதாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளனர். இரு மாநில நல்லுறவை கெடுக்கும் வகையில் கர்நாடகா முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் செயல்படுகின்றனர். அவர்கள் பிரச்னையை தூண்டி விடுகின்றனர். இது சட்டம் ஒழுஙகு பிரச்சினையை ஏற்படுத்தும். அங்கு உள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். நதிநீர் பங்கீட்டில் நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகா கடை பிடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மது விற்பனை ரூ.36,000 கோடி. இந்த ஆண்டு ரூ.45,000 கோடி. மதுவிலக்கு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டது பரவாயில்லை என நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் பயமாக உள்ளது. தமிழ்நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கூலிப்படை கலாச்சாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும்.
ஆளுநரும் முதலமைச்சரும் மோதிக்கொள்வது தமிழ்நாட்டிற்கு பலவீனம். ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சியை கலைப்பது அந்த காலம். நீதிமன்றம் உள்ளது. எனவே அதற்கு சாத்தியம் இல்லை. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இருவரும் இணந்து செய்ல்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.







