அவசர பயணமாக நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில், அவசர பயணமாக ஆளுநர் ரவி நாளை டெல்லி செல்கிறார்.   தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும்…

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில், அவசர பயணமாக ஆளுநர் ரவி நாளை டெல்லி செல்கிறார்.

 

தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் இடையே, மோதல் போக்கே உருவாகி வருகிறது. மேலும் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் இருக்கும் அவர், மாநில அரசின் கொள்கை நிலைப்பாடான புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு ரத்து ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். இவரின் இத்தகைய செயல்பாட்டால் கடும் அதிருப்தியில் இருக்கும் தமிழ்நாடு அரசு, மாநில அரசின் செயல்பாட்டை குறைக்கும் வகையில் செயல்படும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற முழக்கத்துக்கு வந்துள்ளது.

 

மேலும் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் கோப்புகள் நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநர் அவ்வப்போது, அவசர பயணமாக டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர் தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முன்வைக்கிறாரா? என்ற சந்தேகம் திமுக அரசுக்கு எழுந்துள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை ஆளுநர் உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் எப்போதும் பேசும் பொருளாகவே விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. அந்த வகையில், தற்போது ஆளுநர் அவசர பயணமாக டெல்லி செல்ல உள்ளார். இன்று செல்வதாக இருந்த அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டு நாளை காலை செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் பயணமாக நாளை செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை மறுநாள் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

 

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. ஒருபுறம் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது என்ற அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, ஆளுநரின் நாளை டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.