அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்…

அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரை அமலாக்கத் துறையினர் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த பிறகு,  ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.  தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்ட நிலையில்,  அவருக்கு நீதிமன்றக் காவல் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையும் படியுங்கள் : ஆன்லைன் டோக்கனை ரத்து செய்ய வேண்டும்; காளை உரிமையாளர்கள் கோரிக்கை | பின்னணி என்ன?

மேலும்,  அவர் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.  அதனை தொடர்ந்து,  அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  பின்னர் நவம்பர் 15-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  நீதிமன்ற காவலை ஜன.11-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அவர் காணொலி காட்சி மூலமாக புழல் சிறையில் இருந்து ஆஜர்படுத்தப்பட்டார்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அனைத்தும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என கடந்த ஜூன் 16ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில்,”செந்தில் பாலாஜி விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்க வேண்டும்”  என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மீகரீதியாக சரியனது அல்ல எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்”

இந்த வழக்கின் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.  அதில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது மற்றும் அதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக மனு  உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்றும் உச்சநீதிமன்றம் தலையிட தேவையில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.