தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் வரலாற்று நிகழ்வுகளை ஒன்றிய அரசு அழிக்கப் பார்ப்பதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை.வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு துரை.வைகோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை நகரத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் மன்னர் திருமலை நாயக்கர் என புகழாரம் சூட்டினார்.
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசுதின அலங்கார வாகன ஊர்தி அணிவகுப்பில் தமிழக அலங்கார வாகன ஊர்திக்கு, மத்திய அரசு அனுமதி வழங்காதது துரதிஷ்டவசமானது என குறிப்பிட்ட துரை வைகோ, தமிழகத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று நிகழ்வுகளை ஒன்றிய அரசு அழிக்க பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகிக்கப்பட்டதையடுத்து, அதற்கு அனுமதி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், தற்போது அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.








