தெருக்களின் சாதி பெயர்களை நீக்கும் அரசாணை செல்லும் – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

தெருக்களின் சாதி பெயர்களை நீக்கும் அரசாணை செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பு தெரிவித்துள்ளது.

சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

சாதி பெயர்கள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் சமூக சீர்திருத்த நோக்கில் தமிழக அரசு 2025ம் ஆண்டு இந்த அரசாணையை பிறப்பித்தது. ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கி, தமிழக அரசின் அரசாணை செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் கிராமப்புறங்கள், நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் இன்னும் சாதியின் பெயர்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் சாதியின் பெயரில் பரச்சேரி என்ற கிராமமே உள்ளது. இதன் பெயரை மாற்ற வேண்டுமென அக்கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்பெயரை மாற்ற வேண்டுமென சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது. ஆனால், இன்னும் அந்த கிராமத்தின் பெயர் மாற்றப்படவில்லை. இதுபோன்ற ஏராளமான கிராமங்கள், நகர்ப்புறங்களில் சாதியின் பெயர்களில் தெருக்கள், சாலைகள் உள்ளன. இத்தகைய பெயர்கள் மறைமுகமாக சாதிய அடையாளங்களையும், சில நேரங்களில் பிரிவினைகளையும் ஊக்குவிப்பதாகவே உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு சாதி பெயர்களை நீக்கும் அரசாணையை உடனடியாக அமல்படுத்தி தமிழகம் முழுவதும் சாதிகளின் பெயரில் உள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள் ஆகியவற்றை அடையாளங்கண்டு அவற்றை நீக்கிவிட்டு பொருத்தமான தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.