லஞ்சப் பணத்தை விழுங்கிய அரசு அதிகாரி; வாந்தியெடுக்க வைத்த காவல் துறையினர்!

மத்திய பிரதேசத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகளை கண்டதும் வருவாய்த் துறை அதிகாரி ஒருவர், தான் வாங்கிய லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள்…

மத்திய பிரதேசத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகளை கண்டதும் வருவாய்த் துறை அதிகாரி ஒருவர், தான் வாங்கிய லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும், பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கிக் கொள்வதும் அவ்வபோது நடந்து வருகிறது. இதேபோல், மத்தியப் பிரதேச மாநிலம், கட்னி பகுதியில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை அலுவலகத்தில் இன்று மாநில லோக் ஆயுக்தாவின் சிறப்புக் காவல் துறையினர் (SPE) குழு அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கணக்கில் வராத லஞ்சப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். காவலர்களின் வருகையைக் கண்டதும் பயந்து பட்வாரி கஜேந்திரன் என்ற அதிகாரி, தாம் லஞ்சமாகப் பெற்ற 5000 ரூபாய் பணத்தை என்ன செய்வதென்ற தெரியாமல் வாயில் போட்டு மென்று விழுங்கி  இருக்கிறார் .

நிலம் தொடர்பான பிரச்னை ஒன்றில் சந்தன் சிங் லோதி என்பவரிடம் அதிகாரி பட்வாரி கஜேந்திரன் முன்னதாக 5000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து, சந்தன் சிங் லோதி லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். அதையடுத்து, வருவாய்த்துறை அலுவலகத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் மறைந்திருந்து காத்திருந்தனர்.

பட்வாரி கஜேந்திரன் லஞ்சப் பணத்தை வாங்கும்போது கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். கஜேந்திரன் பணத்தை வாங்கும்போது திடீரென அதிகாரிகள் உள்ளே நுழைந்ததால் என்ன செய்வதென்று புரியாமல் பதறிய அவர், சட்டென்று அந்தப் பணத்தை தனது வாயில் போட்டு விழுங்கி இருக்கிறார்.

ஆனாலும், அவர் லஞ்சமாக பணம் பெற்றதையும், அதை அவர் விழுங்கியதையும் காவலர்கள் பார்த்துவிட்டனர். அதையடுத்து, பட்வாரி கஜேந்திரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் விழுங்கிய பணத்தை வெளியே எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இறுதியாக, அவரை வாந்தி எடுக்க வைத்து அந்தப் பணத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.