சொத்து வரி அதிகரிப்பை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 600 சதுர அடிக்கு குறைவாக சொத்து வைத்திருப்பவர்கள், இந்த சுமையை எவ்வாறு சமாளிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு திமுக அரசு செய்யும் உதவி இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ள சசிகலா, ஏழை, எளிய, சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்பிற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு’
இதேபோல, நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் கருத்து கேட்கப்பட்டதா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், கொரோனா பாதிப்பு மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த சொத்து வரி உயர்வு பெரும் பாதிப்பை உண்டாக்கும் என ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர். சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








