ஆசிரியர்கள் பணி நியமனம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பின்வாசல் வழியாக அரசு ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை…

பின்வாசல் வழியாக அரசு ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக
ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்பும் வகையில் 2007ல் அரசாணை
பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில் நீண்டகாலமாக பகுதி நேர தொழில்கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றும் தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரி, பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் மூலமாக நியமிக்கப்பட்ட கோவிந்தராசு, திவ்யா உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில்,
மனுதாரர்கள் அனைவரும் தகுதியான கல்வித் துறை அதிகாரிகளால் நியமிக்கப்படாமல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் முறையான தேர்வு நடைமுறையைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலம் பணியாற்றியதற்காக பணி நிரந்தரம் கோர முடியாது என்றும், முறையாக
நியமிக்கப்படாதவர்களுக்குப் பணி நியமன சலுகை வழங்கினால், தகுதியுடன் அரசு
வேலைக்காக காத்திருப்போரின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என
குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நியமனங்களும் தேர்வு விதிகளை பின்பற்றியே நடத்தப்பட வேண்டும் என்றும், பின் வாசல் வழியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை எந்த சூழ்நிலையிலும் வரன்முறைப்படுத்தக் கூடாது என்றும், வந்த வாசல் வழியாகவே திருப்பி அனுப்ப வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் மனுதாரர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.