பல்வேறு சர்ச்சைகளை கடந்து ஜூலை 11ந்தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அதிமுக பொதுக் குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக இபிஎஸ் தரப்பினர் களம் இறங்கியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்கிற சர்ச்சை விஸ்வரூம் எடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் இந்த விவகாரத்தில் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமையை விரும்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதனை நிலைநாட்ட வரும் 11ந்தேதி கட்சியின் பொதுக் குழுவை கூட்டியுள்ளனர். இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிவையில் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர், நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். எனினும் பொதுக் குழுவிற்கான ஏற்பாடுகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து தீவிரமாக களம் இறங்கி வருகின்றனர்.
பல்வேறு சர்ச்சைகளை கடந்து பொதுக் குழு நடைபெற உள்ளதால், தேவையற்ற நபர்கள் பொதுக் குழுவிற்கு வருவதை தவிர்க்க அவர்கள் அதிக முன்னெச்சரிக்கையாக உள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் QR கோடு அச்சிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதன் முறையாக உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டதாகவும், வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில், கூடுதலாக QR கோடு சேர்த்து அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
QR கோடு குறியீட்டை பரிசோதனை செய்த பின்னரே ஒவ்வொரு உறுப்பினரையும் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுக்குழு அல்லாத உறுப்பினர்கள், வேறு ஆட்கள் உள்ளே நுழைவதை தவிர்க்கும் அதே நேரத்தில், பொதுக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்பதை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்ய முடியும் என்பதால் QR கோடு நடைமுறை பின்பற்றபட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படி பொதுக்குழுவில் உறுப்பினர்களின் பதிவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது, பிற்காலத்தில் உதவும் என்பதாலும் புதிய முயற்சியை கையாள எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க 2 ஆயிரத்து 665 உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு வழங்குவதற்காக புகைப்படம், QR SCAN குறியீடு கொண்ட அடையாள அட்டை அச்சிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் பொதுக்குழு நடைபெற உள்ள முந்தைய நாள் இரவு அடையாள அட்டை விநியோகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.







