ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில், நாடார் சாதனையாளர் மற்றும் போராளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா, சென்னையை அடுத்த மாங்காடு தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமைச்சர்கள் பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், மற்றும் நாடார் சமூகத்தை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில், முதலமைச்சருக்கு செங்கோல் மற்றும் திருச்செந்தூர் வேல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சாதனை புரிந்த நாடார் சமூக பிரமுகர்களுக்கு, காமராஜர் விருது மற்றும் மாபொசி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் கல்வியாளர் சரண்ராஜ்-க்கு, காமராஜர் விருதினை வழங்கினார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.மேலும், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், NDR பவுண்டேஷன் மற்றும் சேது ஸ்கூல் ஆப் பேங்கிங் இணைந்து நடத்தும் வங்கி தேர்வுக்கான பயிற்சி முகாமையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் இருந்தவாறு காணொலி மூலம் துவக்கி வைத்தார். இதையடுத்து, நாடார் சாதனையாளர் விருது விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது, உழைப்பால் உச்சம் தொட்டவர்கள் நாடார் சமுதாய மக்கள் என்றும், தமிழர்களுக்கு சர்வதேச அடையாளத்தை நாடார் சமுதாயம் பெற்றுத் தந்தது, என்றும் முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டினார். மேலும், கல்வியாளர்களை உருவாக்குவதில் நாடார் சமுதாய மக்கள் அக்கறை கொண்டுள்ளனர், என்று கூறிய முதலமைச்சர், இந்திய நாட்டிற்கு 2 பிரதமர்களை அடையாளம் காட்டிய பெருந்தலைவர் காமராஜரை, தமிழகத்திற்கு வழங்கியது நாடார் சமுதாயம், என்றும் குறிப்பிட்டார். மேலும், ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலிக்கும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும், தமிழகத்தில் எந்த சமூகம் முன்னேறினாலும், அது தமிழகத்திற்கு தான் முன்னேற்றம், என்று குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து துறையிலும் நாடார் சமூகம் உயர்ந்துள்ளது, என்றும் கூறினார். கொரோனா நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டபோது, மிகப்பெரிய தொகையாக 35 கோடி ரூபாய் வழங்கியது நாடார் சமூகம், என்றும் முதலமைச்சர் பழனிசாமி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.







