ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை மாணவர் தரக்குறைவாக திட்டி, தாக்க முயற்சித்ததாக வெளியான வீடியோவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களும் பெற்றோர்களுடன் விசாரணைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசியபடி தாக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவின. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் வேலன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
வீடியோவில் காணப்படும் மாணவர், 12ம் வகுப்பு ஏ பிரிவில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று தாவரவியல் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது பாடத்தை கவனிக்காமல் பெஞ்சில் படுத்திருந்ததால் அவரை ஆசிரியர் கண்டித்ததாகத் தெரிகிறது. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர், அவருடைய நண்பர்கள் இருவரையும் வரும் 25-ம் தேதி பெற்றோர்களை அழைத்து வரும்படியும், அன்றைய தினம் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியரின் தலைமையில் நடைபெறும் விசாரணையில் பங்கேற்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதுவரை மாணவர்கள் மூவரும் பள்ளிக்கு வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.








