மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு பிறந்தநாளுக்கு அரசு விழா எடுக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது, வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2010-ம் ஆண்டு ராஜராஜ சோழனின் சதய விழாவை, அப்போதைய முதலமைச்சரான மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கோலாகலமாக கொண்டாடியது. அந்த வகையில், தற்போது ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவை, அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டுள்ளார், மு.கருணாநிதியின் மகனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கருணாநிதியை ராஜராஜ சோழன் என வர்ணித்தவர் புட்டபர்த்தி சாய்பாபா. ஆம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தது குறித்து புட்டபர்த்தி ஆசிரமத்தில், பக்தர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “அவர் உங்களுக்கு கருணாநிதி, எனக்கு அவர் ராஜராஜ சோழன்” என குறிப்பிட்டார் சாய்பாபா. வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி வள்ளுவர் சிலை, ஏராளமான பாலங்கள் என தமிழ்நாட்டில் பல்வேறு பிரம்மாண்ட கட்டுமானங்களின் அடிப்படையில், புட்டபர்த்தி சாய்பாபா அவ்வாறு வர்ணித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள, பிரசித்த பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலை பிரம்மாண்டமாக எழுப்பி வரலாற்றில் இடம்பிடித்தவர் மாமன்னர் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன். அவரது பிறந்தநாளை ஆடி திருவாதிரை நாளில், அரியலூர் மாவட்ட மக்கள் விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பல்வேறு அமைப்பினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, இனி அரசு விழாவாக கொண்டாட உத்தரவு பிறப்பித்துள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். ஆனாலும், அவர்கள் எவருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு, தெற்காசிய நிலப்பகுதியையே தென்னகத்தில் இருந்து ஆண்ட மாமன்னராக திகழ்ந்தவர் ராஜேந்திர சோழன். கடல் தாண்டி கம்போடியா, இந்தோனேசியா உட்பட பல நாடுகளை, தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த தமிழ் பேரரசர்.
ராஜேந்திர சோழனின் கப்பற்படை, அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகச்சிறந்த கப்பல் படையாக இருந்தது. அறுபதாயிரம் யானைகள், பல்லாயிரக்கணக்கான குதிரைகள், ஒரு லட்சம் காலாட்படை வீரர்கள், என மாபெரும் படை நடத்தி, எதிரிகளை துவம்சம் செய்தவர் ராஜேந்திர சோழன். நூற்றுக்கணக்கான படகுகளில் சென்று, வங்கக்கடலின் கிழக்கே உள்ள நாடுகளை போரிட்டு வீழ்த்தினார். இதன் காரணமாக சோழ நாட்டின் எல்லை, வடக்கே கங்கை கரை கடந்து பர்மா, தெற்கே அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் என பரவியிருந்தது. கிழக்கே சுமத்ரா, ஜாவா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா என தெற்கு ஆசிய நாடுகளில், தனது புலிக்கொடியைப் பறக்கவிட்டவர் ராஜேந்திர சோழன்.
ராஜேந்திர சோழனின் ஆட்சியில் படையெடுப்புகள் மட்டுமல்ல நிர்வாகமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. நீர் மேலாண்மையில் ராஜேந்திர சோழன் பெரும் கவனம் செலுத்தினார். தேவைப்படும் இடங்களில் ஆறு, குளங்களை வெட்டி மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். வட இந்தியாவின் பெரும்பாலான அரசுகள், சோழர் பெரும்படைக்கு முன்பு மண்டியிட்டன. தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்த சோழர் படை, மன்னனை வென்று, கங்கை நீரை சோழநாட்டுக்கு கொண்டு வந்ததாக செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அந்தவகையில் தான், கங்கை கொண்ட சோழபுரம் என பெயர் சூட்டப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
ராஜேந்திர சோழனின் மற்றொரு முக்கிய சாதனை, புதிதாக ஒரு பிரம்மாண்ட தலைநகரை நிர்ணயம் செய்தது. செழிப்பான தஞ்சாவூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், வறண்ட பகுததியாக காணப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம், என்ற புதிய தலைநகரை நிர்மாணித்தார். அந்த காலகட்டத்தில், பெரியளவிலான படகுகள் கொள்ளிடம் ஆற்றில் எளிதாக வந்து செல்லும் வகையில் இருந்தது. இதனால், வெளிநாட்டுப் படையெடுப்புகளில் கிடைத்த பெரும் செல்வத்தை, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சிரமமின்றி கொண்டுவர முடிந்தது. இதுவும் தலைநகரம் மாற்றப்பட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் என வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. தான் நிர்மாணித்த தலைநகரில் தரணி போற்றும் வகையில், பிரம்மாண்டமான கோயிலை எழுப்பினார் ராஜேந்திர சோழன். இக்கோயில் யுனெஸ்கோ பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாமன்னர் ராஜேந்திர சோழனின் புகழை பெருமைப்படுத்தும் வகையில், அவர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, 2015 மார்ச் 20-ம் தேதி, ராஜேந்திர சோழனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு. மேலும், கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்றுக்கு, ராஜேந்திரா என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட, சோழர்கள் ஆண்ட திருவாரூரை பூர்வீகமாக கொண்ட தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது, தமிழர் வரலாற்றையும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் புகழையும் மேலும் பரவச் செய்யும் என்பதில் தமிழருக்கு மகிழ்ச்சி தான்.










