சந்திரயான் 3-ன் வெற்றியை கொண்டாடும் விதமாக டூடுல் வெளியிட்ட கூகுள்..!

  இந்தியாவின் ‘சந்திரயான் 3’ வெற்றியை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் தனது லோகோவை மாற்றி டூடுல் வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35…

 

இந்தியாவின் ‘சந்திரயான் 3’ வெற்றியை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் தனது லோகோவை மாற்றி டூடுல் வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று மாலை 5.44 மணி அளவில் சந்திரயான் 3-ன் கடைசி கட்ட பணிகள் தொடங்கியது. அப்போது நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது.அதே நேரத்தில் விக்ரம் லேண்டரின் கால்கள் நிலவை நோக்கி சரியாக திருப்பப்பட்டது. இதனை அடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது.  அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்”  என்று சந்திராயன் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது.

இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சரித்திர சாதனை படைத்துள்ளது.விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு பக்கவாட்டில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது. நேற்று இரவு மேலும் சில புகைப்படங்களை விக்ரம் லேண்டர் அனுப்பியதாக இஸ்ரோ தெரிவித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பிறகு அதில் பொறுத்தப்பட்டுள்ள Landing Imager camera புதிய படத்தை அனுப்பியது. அந்த படத்தில் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய தளமும், லேண்டரில் உள்ள கால்களின் நிழற்படமும் இடம்பெற்றுள்ளன. சந்திரயான் 3 நிலவின் சம தளத்தில் நிலையான இடத்தை தேர்வு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

https://twitter.com/news7tamil/status/1694618632033345914

இந்நிலையில் ‘சந்திரயான்-3’ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது. அதற்காக ஒரு டூடுல் வெளியிட்டு இந்தியாவின் கொண்டாட்டத்தில் பங்கேற்றுக்கொண்டது கூகுள் நிறுவனம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.