பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள தசரா திரைப்படம், அந்த உச்சகட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? வாங்க பார்க்கலாம்…
நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ளது தசரா. இந்த படத்தின் கதையானது, டாஸ்மாக்கில் நடக்கும் சாதிய வேற்றுமைகளை முன்னிறுத்தி தொடங்குகிறது. விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கிராமத்தில் மேல் சாதியினர் டாஸ்மாக் உள்ளேயும், கீழ் சாதியினர் வெளியேயும் அமர்ந்து மது அருந்தும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதைச் சரி செய்வதற்கான போராட்டங்கள் முதல் பாதியில் காண்பிக்கப்படுகிறது.
பின் இரண்டாம் பாதியில் கதை அப்படியே உல்டா. ஒரு பெண் மீதான ஆசையால் பல்வேறு தவறுகளை துணை பஞ்சாயத்து தலைவர் செய்வது போல் காண்பிக்கின்றனர். இப்படியாக முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு கதையாக இருந்தாலும், கடைசியாக அந்த டாஸ்மாக்கே எங்கள் ஊருக்கு தேவை இல்லை என்பது போல் முடிகிறது இந்த தசரா.
இதையும் படியுங்கள் : நல்லது செய்ய வேண்டும் என்றால் கூட ஒரு கெட்ட முகம் தேவைப்படுகிறது – பத்து தல விமர்சனம்
தசரா பண்டிகையை பொறுத்தவரைக்கும், பத்து தல ராவணனை கொல்வது போன்ற நிகழ்வுதான். அதேபோல இப்படத்தின் வில்லனை, தசரா பண்டிகையில் நானி கொல்வாரா? இல்லையா? என்பது அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது.
நானி மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பக்கா. படத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய பாடல்கள் அருமை. அதிலும் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் ’மைனர் வேட்டி கட்டி’ என்ற பாடல் திரையரங்கை அதிர வைத்தது. ஆனால் சில இடங்களில் தேவையில்லாத காட்சிகள் நிறைய உள்ளன. படத்தில் முக்கால்வாசி மது அருந்துவது போல காட்டுவது முகம் சுளிக்க வைக்கிறது.
எப்படா படத்தை முடிப்பாங்க என்ற எதிர்பார்ப்பு இருந்ததா என்னன்னு தெரியல, படம் முடிந்ததும் ரசிகர்களிடையே பெரும் கைத்தட்டல்கள். தசரா படம் சொல்ல வரும் மெசேஜ் என்னவென்று கேட்டால் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு. சிம்புவின் பத்துதல, நானியின் தசரா. அப்ப புரியல இப்ப புரியுது. தசரா உள்ளே தான் பத்து தல இருக்கு.







