நல்ல சாலைகளும் ஒரு சில நேரத்தில் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு விருதுநகரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்
தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
ஏ.வ. வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
இராமச்சந்திரன் மற்றும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மற்றும்
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நெடுஞ்சாலை பொறியாளர்கள் மற்றும் அரசு
அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு,
தமிழகத்தில் சாலை விபத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரின் குடும்பத்தின்
பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மேலும் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழத்தில் 58677 சாலை விபத்துகள் நடந்திருப்பதாகவும் அதில் 1348 விபத்துக்கள் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நடந்து உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இருசக்கர வாகனங்களால் 45 சதவீத விபத்துகளும் நான்கு சக்கர வாகனங்களால்
25 சதவீதம் எனவும் தெரிவித்த அமைச்சர் ஏ.வ.வேலு தமிழகத்தில் பெரும்பாலான
விபத்துக்கள் இருசக்கர வாகனங்களால் மட்டுமே நடைபெறுவதாக தெரிவித்தார்.
எனவே இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் பொழுது மண்டல
அதிகாரிகள் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு உரிய அறிவுரைகளும் வழங்க வேண்டும்
என அதிகாரிகளுக்கு அறிவுரைத்தப் பட்டு இருப்பதாக ஏ.வ.வேலு தெரிவித்தார்.

மேலும் ஓட்டுனர் கவனக் குறைவால் தமிழகத்தில் நடைபெற்றுள்ள விபத்துகளால் 16.727
உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது என்றார். 10 விபத்துக்கள் ஒரு இடத்தில் நடக்குமானால் அந்த இடத்தை மத்திய அரசு கருப்பு புள்ளி என கணக்கெடுத்து வருகிறது. மத்திய அரசின் கணக்கெடுப்பின் படி தமிழகம் முழுவதும் தொடர் விபத்துக்கள் நடைபெறும் இடம் என 1337 இடங்கள் இருப்பதாகவும் அதில் விருதுநகர் மாவட்டத்தில் ஆறு இடங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்பொழுது தமிழகம் முழுவதும் தரமான சாலைகள் அமைக்கப்படுவதால் வாகன ஓட்டுனர்கள் அந்த சாலையை பயன்படுத்தி அதிவேகமாக செல்கின்றனர் இதன் காரணமாகவே ஒரு சில விபத்துக்கள் நடைபெறு கின்றன. நல்ல சாலைகளும் ஒரு சில நேரத்தில் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேசினார்.







