நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஆறு மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல்முறை அமல்படுத்தப்படும் என்றும், அப்போது வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
ஜிபிஎஸ் அடிப்படையிலான அந்த தொழில்நுட்பம் அடுத்த ஆறு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய நிதின்கட்கரி, இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார். அத்துடன் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி : பாதயாத்திரை முதல் பதவி பறிப்பு வரை….
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சுங்க கட்டண வருவாய் தற்போது 40 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக கூறிய நிதின் கட்கரி, இது அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று குறிப்பிட்டார்.







