ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன், 2000ஆம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 2002ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகவும், அவரது வலது கரமாகவும் இருந்து வருகிறார்.
ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார். கடந்த அக். 20ஆம் தேதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த அவருக்கு, நேற்று (அக்.23) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பட்நாயக் ஆலோசனையின் பேரிலேயே அவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், விரைவில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படது. இந்நிலையில், விஆர்எஸ் (விருப்ப ஓய்வு) எடுத்த ஒரு நாளிலேயே,வி.கே. பாண்டியனுக்கு தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி(Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி. இனி, இவர் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







