கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்; கிடைக்கும் சலுகைகள் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் கோல்டன் விசாக்கள் மற்றும் அதனால் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து இந்த பதிவில் காணலாம். அண்மையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான…

ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் கோல்டன் விசாக்கள் மற்றும் அதனால் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

அண்மையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசின் ‘கோல்டன் விசா’ வழங்கி கௌரவித்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் சிம்புவிற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த விசா மூலம் பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.

2019ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக அரசால், கோல்டன் விசா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், திறமைமிக்க மாணவர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமை வழங்கும் நோக்கில் இந்த கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கோல்டன் விசாவானது, 10 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், தொழில் செய்யவும், பணிபுரியவும் வாய்ப்பு வழங்குகிறது. 10 ஆண்டுகாலம் முடிந்த பின்னர் இதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். வழக்கமான விசா நடைமுறையில் பின்பற்றப்படும் ஸ்பான்சர், கோல்டன் விசாவில் அவசியமில்லை. கோல்டன் விசா பெற்றவர்கள் இந்த 10 ஆண்டு காலத்தில் தங்கள் குடும்பத்தினரையும் உடன் தங்க வைப்பதற்கு வழிவகை செய்கிறது.

இத்தகைய பல்வேறு சலுகைகள் கொண்ட கோல்டன் விசாவை பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பெற்றார். அவரை தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா, இயக்குநர் வெங்கட் பிரபு, மீனா, சிம்பு உள்ளிட்டோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மலையாள திரையுலகில் மம்மூட்டி, மோகன்லால், பிருத்திவிராஜ் உள்ளிட்டோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தொழில் தொடங்கும் இந்தியர்களில் 30 சதவீதத்தினர் தேர்ந்தெடுக்கும் அயல்நாடாக ஐக்கிய அரபு அமீரகம் அமைந்துள்ளது. அதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும், தங்களது நாட்டை பன்முக தன்மை கொண்ட நாடாக மாற்றும் முயற்சியாக இந்த கோல்டன் விசா திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.