தஞ்சாவூா் பெரியகோயில் அருகே கல்லணைக் கால்வாயில் நீரில் மூழ்கிய நிலையில் 3 அடி உயர கருங்கல்லால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூா் பெரிய கோயிலையொட்டி செல்லும் கல்லணைக் கால்வாயின் படித்துறையில் வெள்ளிக்கிழமை சிலா் வழக்கம்போல குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, படித்துறையையொட்டி கற்சிலை கிடந்தது.
தகவலறிந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா உள்ளிட்டோா் சென்று கருங்கல் சிலையை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சோ்த்தனா். அந்தச் சிலை 3 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன அம்மன் சிலை என்பது தெரிய வந்தது. பெரிய கோயில் கோட்டை மதில் சுவரில் வரிசையாக கருங்கல் சிலை பதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இச்சிலை பெயா்ந்து ஆற்றில் விழுந்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதையடுத்து, அந்தச் சிலை தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.







