உடல் நலக்குறைவு காரணமாக காலமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஞானதேசிகன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானதேசிகன் கட்சிக்கு அப்பாற்பட்டு அரசியல் நாகரீகம், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார்.
ஞானதேசிகன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அங்கிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அழைத்து சென்றார். தொடர்ந்து ஞானதேசிகன் உடலுக்கு, மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், ஞானதேசிகன் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும சிறப்பாக செயல்பட்டவர் என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து ஞானதேசிகன் உடல் ஆழ்வார்பேட்டையிலிருந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மின்மயானத்தில் உறவினர்கள் இறுதிஅஞ்சலி செலுத்தியதையடுத்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.







