நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.
சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

பசி விவகாரத்தில் இந்தியா தீவிர அபாயம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தெற்காசியாவில் ஆப்கானிஸ்தான் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் உயரத்துக்கு தகுந்த எடை இல்லாத குழந்தைகள் உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மியான்மர் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன. ஆசிய நாடுகளில் போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி இருக்கிறது.

உலக பட்டினி குறியீடு ஆனதை கணக்கிட 4 முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்கின்றனர். முதல் காரணி ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் போதுமான கலோரி உட்கொள்ளாமல் இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது, சைல்ட் ஸ்டன்டிங் என்பது நாட்டின் மக்கள் தொகையில் 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் என கணக்கிடப்படுகிறது. இதற்கான தரவுகள் ஐ.நா. சபை, அதன் கிளை அமைப்புகளான யுனிசெப், எஃப்ஏஓ மற்றும் உலக வங்கியிடம் இருந்து பெறப்படுகிறது. இந்தப் பட்டியலில் சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் 5-க்கும் கீழ் GHI ஸ்கோர் பெற்று பட்டினி இல்லாத நாடாக முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-இரா.நம்பிராஜன்
Twitter ID: https://twitter.com/Nambijournalist







