2021-ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டு பட்டியலில் இந்தியா 101-வது இடத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பட்டினியால் வாடுவார் அதிகரித்துள்ளனர்.
உலக அளவில் பட்டினி, ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீட்டு பட்டியலை, அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் (Concern Worldwide) அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் (Welt Hunger Hilfe) ஆகிய அமைப்பும் வெளியிடுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 2021ம் ஆண்டில் 116 நாடுகளுக்கான பட்டியலில் 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, சத்துணவு குறைபாட்டால் குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, வயதுக்கு ஏற்ற உயரமின்மை, குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணங்களை வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
2021ம் ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் (92), பங்களாதேஷ் (76), நேபாளத்தை (76) விட இந்தியா பின் தங்கி இருக்கிறது.
சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு 5-க்கும் குறைவாக இருக்கிறது . இந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









