பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அதிக முக்கியத்துவம் வழங்கப்படும், என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின், முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இணையவழி குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாப்பிற்கு உயர் முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறினார். மேலும், வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் ஊக்குவிக்கும் பொருட்டு, பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டந்தோறும் நிறுவப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் ஆதரவளிக்கும் திட்டங்களின் பயன்கள், சரியாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, அதிக இடங்களில் களப்பணியாற்றிடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வலுப்படுத்தப்படும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புத்துயிர் அளிக்கப்படும் எனக் கூறினார். மேலும், திருநங்கைகளின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த, திறன் பயிற்சி அளிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.







