சிறுமி கொலை வழக்கு | தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!

6 வயது சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த பாபு – ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் ஹாசினி (வயது 6) மாயமானார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் தஷ்வந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்து விட்டுத் தப்பினார். தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் தஷ்வந்த்தை மும்பையில் கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்து தாயைக் கொன்ற வழக்கில், தஷ்வந்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.

இருப்பினும், சிறுமி கொலை வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்தது. இந்த மரண தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், இதை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றத்தை நிரூபிக்க தவறியதாகக் கூறி விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.