கூலிப்படை மூலம் உறவினரை கொலை செய்ய முயற்சி : காவல் உதவி ஆய்வாளர் கைது!

நில அபகரிப்பதற்காக உறவினரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய உதவி ஆய்வாளர். உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை செங்குன்றம் தங்கசாலை தெருவை சேர்ந்தவர் தீபேஷ். இவர் சாமியார் மடம் தண்டல்…

நில அபகரிப்பதற்காக உறவினரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய உதவி ஆய்வாளர். உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை செங்குன்றம் தங்கசாலை தெருவை சேர்ந்தவர் தீபேஷ். இவர் சாமியார் மடம்
தண்டல் கழனி பகுதியில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பழுது பார்க்கும்
நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த மூன்றாம் தேதி தீபேஷ் அலுவலகத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரது அலுவலகம் எதிரே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது
அலுவலகத்திற்கு எதிரே சிறுநீர் கழிக்க வேண்டாம், தள்ளி நின்று கழிக்குமாறு
தீபேஷ் அவர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தீபேஷை ஆபாசமாக திட்டி, கை மற்றும் கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு, தப்பிச்
சென்றனர்.

இந்த மோதலில் படுகாயம் அடைந்த தீபேஷ்ஷின் ஒரு கண் பார்வை பறிபோனது. இந்த
சம்பவம் தொடர்பாக தீபேஷ் செங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்
பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு
செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர்கள் தீபேஷை கண்ணில் தாக்கும்
காட்சிகள் பதிவாகி இருந்தது.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து செங்குன்றம் போலீசார் நடத்திய
விசாரணையில் கொடுங்கையூரை சேர்ந்த ஜமித் ரபி மற்றும் சோழவரத்தை சேர்ந்த சந்திரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. செங்குன்றம் தண்டல்கழனி பகுதியில் 100 சென்ட் பூர்வீக இடம் அமைந்துள்ளது. அந்த இடத்தை சகோதரர்களான வசந்தன் மற்றும் தேவராஜன் ஆகியோருக்கு
தலா 50 செண்ட் என அவரது தந்தை பிரித்து கொடுத்தார். வசந்தனின் மகளான
சசிரேகாவுக்கு உதவி ஆய்வாளரான ஜெயக்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது.

கடந்த 2000ஆம் ஆண்டு வசந்தன் இறந்த பிறகு வசந்தனிடம் இருந்த 50 சென்ட் இடத்தை
மருமகனான உதவி ஆய்வாளர் ஜெயக்குமாருக்கு வந்துள்ளது. கடந்தாண்டு உடல் நலக்குறைவால் தேவராஜன் இறந்ததால் அவரது மகனான தீபேஷ் அவரது
தந்தை தேவராஜனின் இடத்தில் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

தீபேஷிடம் உள்ள 50 சென்ட் இடத்தை அபகரிக்க உதவி ஆய்வாளரான
ஜெயகுமார் பல வழிகளில் அவரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீபேஷ்
இடத்தை எழுதி கொடுக்காமல் இருந்ததால் ஜெயக்குமார் மற்றும் தீபேஷிற்கு இடையே
அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தீபேஷை கொலை செய்து விட்டு இடத்தை அபகரிக்க உதவி ஆய்வாளர்
ஜெயக்குமார் கூலிப்படையை ஏவி உள்ளார். அவர்கள் சிறுநீர் கழிப்பது போல நடித்து
தீபேஷிடம் பிரச்னை ஏற்படுத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியது போலீஸ்
விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரை கைது செய்தனர். இவர் நீலாங்கரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உட்பட நான்கு
பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில்
அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்ரீதர், வினோத் ஆகிய
இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.