டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தின்போது ஜெர்மனி கால்பந்து அணி வீரர் மீது இனவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் சக வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கவுள்ள வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டி பயிற்சி ஆட்டம் ஒன்றில், ஜெர்மனி அணி ஹோண்டுராஸ் அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் முடிய 5 நிமிடங்களே இருந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. அப்போது ஜெர்மனி அணி வீரர்கள் திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இது குறித்து விளக்கம் அளித்த ஜெர்மனி அணி, தங்கள் அணியைச் சேர்ந்த ஜோர்டன் டொரனாரிகா என்ற வீரர், இனவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் மைதானத்தை விட்டு ஜெர்மனி வீரர்கள் வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளது.
தங்கள் அணி வீரர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகும்போது போட்டியில் பங்கேற்பது என்பது அவ்வளவு முக்கியமாகப்படவில்லை என ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் குன்ஸ் தெரிவித்தார்.
https://twitter.com/DFB_Team_EN/status/1416359372477898753
மைதானத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், ஹோண்டுராஸ் அணி வீரர்களால் ஜெர்மனி வீரர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் ஒலிம்பிக் நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வலுத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள், இனவெறி தாக்குதலுக்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.









