விண்வெளி வீரர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சாா்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இன்று காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதனை அடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:
பி.எஸ்.எல்.வி ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு மிகவும் நம்பகத்தகுந்ததாக உள்ளது. முழு வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு முதல் பயன்படுத்தப்படும். இந்தாண்டில் நிறைய விண்வெளிப் பயணங்களை இஸ்ரோ மேற்கொள்ளவுள்ளது. ககன்யான் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது தொடர்ந்து எஸ்எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட விண்வெளி பயணங்கள் இருக்கின்றன. இவ்வாறு கூறினார்.
இவரை தொடர்ந்து இன்று விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-56-ன் திட்ட இயக்குனர் பிஜூ பேசியதாவது:
வெற்றிகரமாக இன்று செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 536 கிலோ மீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. ஒரு தனி நிறுவனத்திற்காக 4வது பயணத்தை பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று மேற்கொண்டுள்ளது. 530- 570 கிலோ மீட்டர் உயரம் வரையில் அதிக அளவில் விண்வெளி கழிவுகள் இருப்பதோடு, அதிக அளவிலான செயற்கைக்கோள்களின் சுற்றுவட்ட பாதையாகவும் இந்த பகுதி உள்ளது.
அதனால் 350 கிலோமீட்டர் புவி தாழ்வட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்துவது குறித்து இன்று அனுப்பப்பட்ட ராக்கெட்டில் உள்ள பிஎஸ்-4, 4வது நிலை மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு பிஎஸ்எல்வி சி-56-ன் திட்ட இயக்குனர் பிஜூ கூறினார்.







