ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு பரிமாற, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களால் விரும்பி உண்ணப்படும் பாரம்பரிய உணவுகளை நட்சத்திர உணவகங்கள் தயாரித்து வருகின்றன.
டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில்ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானத்தில் புறப்பட்டார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக டெல்லியில் 1 லட்சத்து 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்வுக்காக புது டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் உள்ள 120 சமையல் கலை நிபுணர்கள், நாடு முழுவதும் மிகச் சுவையான 500 உணவுகளைத் தேர்வு செய்து, ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு விருந்துபடைக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக இக்குழுவினர் பல்வேறு உணவுகளையும் செய்துபார்த்து சுவை மற்றும் ருசியை கூட்டி தொடர்ந்து அதனை மெருகேற்றும் பணிகளை செய்து வருகிறார்கள்.
ஒட்டுமொத்த நாட்டின் மிகச் சிறப்பான பாரம்பரிய உணவுகள் அனைத்தையும் இந்த மெனுவில் சேர்த்துவிட வேண்டும் என்பதே அவர்களது ஒற்றைக் குறிக்கோள். ஒரு தட்டு என்றால், அதில் 12 வகையான உணவுப்பொருள் இருக்குமாம். தெருவோரக் கடைகளில் விற்பனையாகும் உணவு முதல், தமிழகத்தின் பனியாரம், மகாராஷ்டிரத்தின் பாவ் பாஜி வரை இதில் அடங்கும். ஒவ்வொரு நாளும் விருந்தினர்களுக்கு 170 வகையான உணவு பரிமாறப்படவிருக்கிறது.அதில், சிக்கன் கோலாபுரி, சிக்கன் செட்டிநாடு என அசைவ உணவுகள் மட்டுமல்லாமல், தென் இந்திய மசால் தோசை, பெங்காலி ரசகுல்லா, இந்திய இனிப்பு வகைகள், பானி பூரி, பேல் பூரி, சமோசா, வடாபாவ் உள்ளிட்டவை இடம்பெறவிருக்கின்றன.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சர்வதேச நாடுகள் மற்றும் உள்நாட்டுத் தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு நாளை விருந்தளிக்கிறார். பிரகதி மைதானில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள 78 கலைஞா்களை அடங்கிய ‘இந்தியா இசைப் பயணம்‘ என்கிற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.