மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் நூலகம் அமைக்க இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை என்று தமிழ்ச் சங்கத்தின் துணை இயக்குநர் மதுரைக் கிளையில் தெரிவித்தார்.
உலக தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து
தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய
பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும்
கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை 1 மாதத்திற்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற
மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற
மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு 4 ஆண்டுக்கு மேலாகியும்
தமிழ் மொழி வளர்ப்புக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில்
தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள்,
தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில்
புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக இன்று
விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குநர் நேரில் ஆஜராகி கூறியதாவது:
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழை வளர்க்க பல
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக மதுரை உலக தமிழ்சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ் சங்கத்தில் 26 ஆயிரத்து 35 நூல்கள் உள்ளன. பதிப்பிக்கும் நூலின் ஒரு
நகலை, உலக தமிழ் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இத்தனை
நூல்களும் பெறப்பட்டுள்ளன.

2017- 18 ல் நூலகத்தை அமைப்பதற்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என
அறிவிப்பு வெளியானது. கடந்த 2018 பிப்ரவரி 5ஆம் தேதி அதற்காக அரசாணை
பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புத்தகங்களை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு
செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், உலக தமிழ் சங்கத்தில் நூலகம் அமைக்க 6 கோடி ஒதுக்கீடு
செய்ய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இதுவரை செயல்படுத்தாமல் உள்ளது என
தெரிவிக்கப்பட்டது
இதனை அடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு
செயல்படுத்தாத திட்டங்களை கணக்கிட்டால் அது, கணக்கீடு செய்யாத அளவில்
இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம்
கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை 1 மாதத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.







