முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

கீழடி அகழாய்வு, அருங்காட்சியக தொடக்கம் குறித்த முழு விவரம்


தி. வேல்முருகன்

கட்டுரையாளர்

சிவகங்கை , திருப்புவனம் – கீழடியில் மொத்தம் 8- கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன. கீழடியில் அருங்காட்சியம் இரண்டு மாதங்களில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதுபற்றிய முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

கீழடி அகழாய்வு

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு களத்திற்கு அடுத்து இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய தொல்லியல் அகழாய்வு பணி கீழடி என்பதாகும். வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழரின் பண்பாடு , நாகரிகத்தை கீழடி அகழாய்வு வெளிகொணர்கிறது.

இத்தொல்லியல் களம் கிமு – 6 நூற்றாண்டிற்கும் கிமு – 5 நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்கு உரியது ஆய்வாளர்கள் என கணித்துள்ளனர். கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் அனைத்தும் மக்கள் பார்வைக்கு கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை உணர்த்துகிறது.

இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது முடிந்துள்ளன.

கீழடி அமைவிடம்

சிவகங்கை மாவட்டம் , திருப்புவனம் அருகே உள்ள கீழடி என்ற ஊரின் கிழக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “மணலூர்” கண்மாயின் மேல்கரையில் பள்ளிச் சந்தை திடல் என்ற மண்மேட்டில்  கீழடி அகழாய்வு மையம் அமைந்துள்ளது.

இங்கு அருகில் உள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உழும்போது தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளது. அதன் காரணமாக கீழடி அருகில் உள்ள பகுதிகள் கொந்தகை, மணலூர் அகரம் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.

கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்லியல் பொருட்கள்

பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரண பொருட்கள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் பல கிடைத்துள்ளன.

ஏழாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள்

இந்த ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைக்கப் பெற்றுள்ள தொல்லியல் கண்டுபிடிப்புகள்

கீழடி அகழாய்வு வெளிக்கொணரும் பண்பாட்டுக் கூறுகளை செங்கல் ‘கட்டுமானங்கள், உறைகிணறுகள், கூரை ஓடுகள் மற்றும் அரிய தொல் பொருட்களான தங்க அணி கலன்களின் பாகங்கள், செம்பிலான பொருட்கள், இரும்பு பயன்பாட்டுப் பொருட்கள், சுடுமண்ணாலான ஆட்டக்காய்கள், விளையாட்டுச் சில்லுகள், காதணிகள், தக்களிகள், சுடுமண்ணாலான மணிகள், கண்ணாடி மணிகள், மதிப்பு குறைந்த மணிகள், பானை ஓடுவகைகளான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோம் நாட்டைச் சார்ந்த ரௌலட் பானை ஓடுகளின் சாயல் கொண்ட பானை ஓடுகள் ஆகியவைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. வரைவதற்கு முன்னர் மற்றும் பின்னர் வரையப்பட்ட குறியீடுகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்றவையும் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

மதுரையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பேசிய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  கீழடி அருங்காட்சியகம் கட்டிடப் பணிகள் 95% பணிகள் முடிந்துள்ளது. கீழடி அருங்காட்சியகத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார்.

கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வு தேவைப்பட்டால் கடந்த கால அகழாய்வின் முடிவின் அடிப்படையில் தொடங்கப்படும். வைகைக்கரை நாகரிகத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல் சார்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் நிச்சயம் தமிழக கல்வி வளர்ச்சிக்கு உதவுவார்: அமைச்சர் நம்பிக்கை

EZHILARASAN D

சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம்-முதல் தகவல் அறிக்கை பதிவு

Web Editor

மநீம ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி வழங்குவோம்: கமல்ஹாசன்

EZHILARASAN D