இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வீதிகளில் இறங்கி மக்கள் போராடுவது தொடர் கதையாகும் என்று அந்நாட்டில் அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் சாலைகளில் இறங்கி இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை என கடுமையான சிரமங்களை இலங்கை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கை இந்த நிலைக்கு தள்ளப்பட காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் மோசமான பொருளாதார கொள்கைகள் தான் என்றும் அவர் பதவி விலக வேண்டுமென்றும் கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் தன்னெழுச்சி போராட்டம் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அதைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். எனினும், அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று உறுதியுடன் இருந்து வருகிறார்.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
“இது ஏற்றுக் கொள்ள முடியாத பிரச்னை. அரசு எங்களுக்கு ஒரு நல்ல தீர்வை அளிக்க வேண்டும்” என்று இலங்கை செவிலியர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இதனிடையே, அரசு சுகாதாரப் பணியாளர்களும் இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவும் அண்டை நாடான இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சர்வதேச நிதிய அதிகாரிகளிடமும் இலங்கை அதிபர் நிதியதவி கோரியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்







