மைலார்ட் முதல் பூக்கி வரை : இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி? ஒரு மினி ரிவ்யூ!

மைலார்ட் முதல் பூக்கி வரை : இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி? ஒரு மினி ரிவ்யூ!

இந்த வாரம் மை லார்ட், பூக்கி, மைலாஞ்சி, தெரிஞ்சா காதலிங்க, ஸ்வீட்டி நாட்டி கிரேசி, கப்பிள் ப்ரண்ட்லி, ட்ரீம் கேர்ள், சீதா பயணம் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் உயிருள்ளவரை உஷா, மின்னலே, காதலர் தினம், மவுனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகி உள்ளன. இந்த படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மைலார்ட்:

ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்த படம். கிட்னி திருட்டுதான் படத்தின் முக்கியமான கரு என்றாலும் மனிதநேயம், எளிய மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம், அரசியல் அதிகார கூட்டங்களின் ஆதிக்கம் என பல விஷயங்களை காமெடி கலந்த சட்டையர் பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். முத்து சிற்பி என்ற கேரக்டரில் ஒரு சாமானிய மனிதனின் பொருளாதார பிரச்னைகள் ஏமாற்றப்படும் விதம். அதிகார வர்க்கத்தால் அவஸ்தை என பல விஷயங்களை விரிவாக நடிப்பில் காண்பித்திருக்கிறார் சசிகுமார்.

அயோத்தி நந்தன் டூரிஸ்ட் பேமிலி வரிசையில் மைலார்ட் அவருக்கு முக்கியமான படம். அறிமுக பாடல் கிளைமாக்ஸ் நடிப்பு இரண்டிலும் மனதில் நிற்கிறார். கோவில்பட்டி பெண் சுசீலாவாக வாழ்ந்திருக்கிறார் ஹீரோயின் சைத்ரா, தீப்பெட்டி தொழிற்சாலையில் அவர் பணியாற்றுவது, சசிகுமாருடனான காதல் சீன்கள், வயிற்று வலியால் அவதிப்படுவது, அப்பா ஆவி உடலில் வர சாமி ஆடுவது என பல சீன்களை கலக்கியிருக்கிறார். சைத்ராவுக்கு பல விருதுகள் நிச்சயம். நேர்மையான லோக்கல் பத்திரிகையாளராக குரு சோமசுந்தரமும், நீதிக்காக போராடுகிற வக்கீலாக கோபி நயினாரும் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்கள்.

கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு சில விஷயங்கள் செய்பவராக ஆஷா சரத்தும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார். இவர்களை தவிர கோவில்பட்டி மக்கள் அமைச்சர் பி ஏ பிரசன்னா, தாத்தா, டாக்டர் என பல கேரக்டர்கள் மனதில் நிற்கிறார்கள். ஷாப் ரோல்டன் இசையும், நீரவ் ஷோ ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அப்பாவி மக்களின் கிட்னி எப்படி திருடப்படுகிறது, அந்த நெட்வொர்க் எப்படி இயங்குகிறது. பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்கிறதா என்பதை நீதிமன்றம், நீதிபதி கலந்தும் அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். நீதிபதியாக வரும் ஜெயபிரகாஷ் கேரக்டர் ரொம்பவே புதுமை, அருமை. கிளைமாக்சில் பாசிட்டிவான விஷயத்தை சொல்லி மனிதநேய முக்கியம். வள்ளலாரின் வழியை பின்பற்றுங்கள் என்று இயக்குனர் சொல்லி முடிக்கும் போது பலர் கண் கலங்குவது நிச்சயம்.

பூக்கி:

கணேஷ் சந்திரா இயக்கத்தில் காதலர் தினத்திற்கு வந்திருக்கும் கலர்புல் காதல் படம் பூக்கி. விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து எடிட்டிங் செய்திருக்கிறார். அவர் மருமகன் அஜய்தீஷன் ஹீரோ, தனுஷா ஹீரோயின். காதலர்களாக இருக்கும் அஜயும், தனுஷாவும் சண்டை போட்டு பிரிகிறார்கள். அவர்களுக்கு இன்னொரு காதலும் வருகிறது. ஆனால் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். இருவரும் மீண்டும் சந்தித்தபோது இணைந்தார்களா அல்லது இரண்டாவது காதல் ஜெயித்ததா என்பது பூக்கி படத்தின் கதை. காதலில் தவிப்பது காதலியுடன் சண்டை, இன்னொரு காதலியுடன் பெங்களூரில் சுற்றுவது, திருமண மேட்ரிமோனியலில் பெண் தேடுவது, நண்பர்களுடன் அரட்டை என பல இடங்களில் இளமை ததும்பும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார் அஜய்.

பாடல் காட்சிகளில் அருமையாக ஆடி இருக்கிறார் அவரின் ஜிம் சம்பந்தப்பட்ட சீன்கள், பெங்களூர் சீன்கள் ரொமான்ஸ் சீன்கள், படத்துக்கு பிளஸ். அதுபோல் தனுஷா அழகாக நடித்துள்ளார். சில ரொமான்ஸ் பாடல்கள் படத்தை ரசிக்கவைக்கிறது. போலி சாமியாராக வரும் சுனில் ஒரு நிஜ சாமியாரை நினைவு படுத்துவது போல் இருந்தாலும் அவருடைய போர்ஷன் விறுவிறுப்பாக உள்ளது. அதேபோல் ஹீரோயின் சம்பந்தப்பட்ட இந்த ஆன்மீக போர்ஷனும் கலகல படத்தின் இசையமைப்பாளரை, தயாரிப்பாளர் என்பதால் பாடல் காட்சிகளில் கவனம் செலுத்தியுள்ளார். ஆனாலும் விஜய் ஆண்டனி பாடலில் ஆடுவதை தவிர்த்து இருக்கலாம்.

அது படத்துடன் ஒட்டவில்லை, அதேபோல் கிளைமாக்சில் இன்னும் கொஞ்சம் புதுமையை விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம். பூக்கி என்பது இன்று இளைஞர்கள் காதலர்கள் பயன்படுத்தும் வார்த்தை. அதேபோல் படத்தில் வரும் வசனங்களும் காட்சி அமைப்புகளும், கதாசிரியர் புதிய பரிதியின் கதை மற்றும் வசனங்களும் ரசிக்கும்படி உள்ளது. படத்தின் காட்சிகள் வசனங்கள் இன்றைய இளைஞர்களின் மனசாட்சியாக உள்ளது. இப்போதைய காதலர்களின் மனநிலை, வாழ்க்கை குறித்து எதிர்காலம் குறித்த பார்வை, காதல் பிரேக்கப் ஆகும்போது அவர்கள் எடுக்க முடிவு போன்ற பல விஷயங்களை இன்றைய தலைமுறையுடன் ஒப்பிட்டு பூக்கியை கலர்ஃபுல்லாக இளமையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

மைலாஞ்சி:

அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிருஷா குரூப், சிங்கம்புலி, முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்த காதல் படம். ஊட்டியில் வசிக்கும் ஹீரோயின் சென்னையில் இருந்து வரும் ஒரு இளைஞரை காதலிக்கிறார். ஆனால் காதலை அவர்கள் சொல்லும் முன் இளைஞர் சென்னைக்கு திரும்பி விடுகிறார். ஊட்டிக்கு வரும் போட்டோகிராபரான ஸ்ரீராம் கார்த்திக்கிடம் தனது காதல் பற்றி ஹீரோயின் சொல்ல அவரை காதலிக்கும் ஹீரோ என்ன செய்கிறார். கடையில் யாரும், யாரும் இணைந்தார்கள் என்பது மைலாஞ்சி படத்தின் கதை ஊட்டியில் உள்ள ஒரு இடத்தின் பெயர் மைலாஞ்சி. அதனால் கதை முழுக்க முழுக்க ஊட்டியில் நடக்கிறது.

செழியன் ஒளிப்பதிவில் ஊட்டியின் அழகு அழகாக வெளிப்பட்டிருக்கிறது. பாடல் காட்சியில் இன்னும் அழகு படத்தின் மிகப்பெரிய பலம் செழினின் கேமரா அடுத்து இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும், இதமாக இருக்கிறது. ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பு ஓகே அந்த கால ஹீரோயின் போல சைக்கிளில் வருகிறார். கிருஷா குரூப் அவரின் பாடல் காட்சி காதல் சம்பந்தப்பட்ட இடங்கள் ஓரளவு ஓகே. ஒரு ஹீரோயின் இரண்டு ஹீரோக்கள் என்ற கதை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். இதில் கொஞ்சம் வித்தியாசம் கிளைமாக்ஸ் பரவாயில்லை. சிங்கம்புலி காமெடி செட் ஆகவில்லை. ஊட்டியை ரசிப்பவர்களுக்கு, செழியனின் ஒளிப்பதிவு ரசிப்பவர்களுக்கு, இளையராஜா இசை ரசிப்பவர்களுக்கு மைலாஞ்சியை கொஞ்சம் பிடிக்கும்.

சீதா பயணம்:

தனது மகள் ஐஸ்வர்யா வைத்து அப்பா அர்ஜுன் இயக்கி உள்ள படம் சீதா பயணம். சீதா என்பது ஐஸ்வர்யா கேரக்டர் பெயர். அவரின் பயணத்தை அதற்கான காரணத்தை விவரிக்கிறது படத்தின் கதை. சில நொடிகள் தாமதம் காரணமாக ஒரு மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பிக்கிறார் ஐஸ்வர்யா. அப்பொழுது வாழ்வின் அர்த்தத்தை, நேரத்தின் அருமை உடைந்து சிலருக்கு நன்றி சொல்ல ஒரு பயணம் செய்கிறார் அந்தப் பயணத்தில் என்ன நடக்கிறது யாருக்கெல்லாம் நன்றி சொல்கிறார் என்பதை ஒரு அழுத்தமான உணர்வுபூர்வமான கதையாக இயக்கி இருக்கிறார் அர்ஜுன்.

ஐஸ்வர்யா நடிப்பு பாடல் காட்சி ஓகே ஆனால் அவருக்கு ஜோடியாக வரும் நிரஞ்சன் காட்சிகள் ஒட்டவில்லை. ஐஸ்வர்யா அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் கோவை சரளா போன்றவர்களும் நடித்துள்ளனர் ஆனாலும் படத்தின் காட்சிகள் கொஞ்சம் அந்நியமாக இருக்கிறது காரணம் தெலுங்கு படத்தை தமிழில் டப் பண்ணி இருப்பதால் அந்த சாயல் தெளிவாகவே தெரிகிறது. ஹீரோயின் கேரக்டர், அவரின் பயண சுவாரஸ்யங்கள் பரவாயில்லை ரகம் பயணத்தை விரும்புவர்களுக்கு ஒரு மாறுபட்ட கதையை ரசிப்பவர்களுக்கு மட்டும் இந்த பயணம் பிடிக்கும்.

தெரிஞ்சா காதலிங்க:

எம்.கஜேந்திரன் இயக்கத்தில் கிரண், விபின், சாகுல் பிரான், அஜன்யா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ள படம் தெரிஞ்சா காதலிங்க. சென்னையில் வசிக்கும் மூன்று நண்பர்களின் மாறுபட்ட வாழ்க்கையை, அவர்கள் பெண்களை பார்க்கும் விதத்தை, காதலை புது பார்வையில் சொல்கிறது படம். ஒருவன் ஆன்மீகத்தில் நாட்டமாக இருக்கிறான் ஒருவன் பெண்கள் மீது மோகமாக இருக்கிறான்.

ஒருவன் காதலை நேசிக்கிறான். கிராமத்தில் வசிக்கும் ஹீரோயினை இவர்களில். ஒருவர் சென்னைக்கு அழைத்து வர என்ன நடக்கிறது. கிராமத்தில் அந்த பெண்ணுக்கு, வைத்தியரான அவர் தாத்தாவுக்கு என்ன நடந்தது போன்ற விஷயங்கள் எளிமையாக சொல்லப்பட்டுள்ளன புது முகங்கள் நடித்திருப்பதாலும் புதுமுக இயக்குனர் இயக்கி இருப்பதாலும் பல இடங்களில் படத்தின் நேர்த்தி குறைவாக உள்ளது.

ஸ்வீட்டி நாட்டி கிரேசி:

ராஜசேகர் ஜி இயக்கத்தில் த்ரி குண், ஸ்ரீஜித்தா தம்பி ராமையா, சுந்தரா டிராவல்ஸ் ராதா, சத்யன் இனியா நடித்த காமெடி கலந்த அடல்ட் கண்டண்ட் படம் ஸ்வீட்டி நாட்டி கிரேசி. ஹீரோயின் ஸ்ரீஜித்தை காதலிக்கும் ஹீரோ த்ரிகுண். உனக்கு முன்பே இரண்டு பெண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளேன் எனக் கூறுகிறார் ஆனாலும் அதை மன்னித்து அவரை திருமணம் செய்து தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த ஹீரோயின். வீட்டில் அக்காவாக இருக்கும் இனியாவும் மாமியாராக இருக்கும் ராதாவும் தான் ஹீரோ சொன்ன பெண்கள்.

அடுத்து என்ன நடக்கிறது என்பதை டபுள் மீனிங் டயலாக் அடல்ட் கன்டென்ட் காமெடி கலந்து கொடுத்திருக்கிறார். இயக்குனர் ராஜசேகர் ஜி. முழுக்க அந்த மாதிரி டயலாக், அந்த மாதிரி கான்செப்ட் படம் என்பதால் பெண்கள், குடும்பத்துடன் பார்க்க முடியாது. மாமனாராக வரும் தம்பி ராமையா காட்சிகள், அவரின் பயம் கலந்த காமெடிகள் ரசிக்க வைக்கிறது. இனியா, ராதாவா இப்படி என ஆச்சரியப்படும் அளவு அவர்கள் நடிப்பு இருக்கிறது. ஹீரோ அந்த வேடத்திற்கு பக்காவாக செட் ஆகி இருக்கிறார்.

கப்பிள் பிரண்ட்லி:

இன்டிரியர் டெக்ரேசன் துறையில் சாதிக்க நினைக்கும் ஹீரோ சந்தோஷ் சோபனும், ஐடி துறையில் கலக்க வேண்டும் என நினைக்கும் ஹீரோயின் மானசாவும் ஒரு சூழ்நிலையில் சந்திக்கிறார்கள். காதல் வயப்பட்டு லிவிங் டுகெதர் ஆக வாழ்கிறார்கள். அடுத்து அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது. திருமணத்தில் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா என்பதை ஒரு விதமான கண்ணோட்டத்தில் சொல்லி இருக்கிறார். இயக்குனர் அஷ்வின் சந்திரசேகர்.

சமீபத்தில் வந்த காதல் படங்களில் இது புதுசு. இயக்குனர் சொல்லும் கருத்து பார்வையும் புதுசு. வறுமை காரணமாக கால் டாக்சி ஓட்டுகிற ஹீரோ, கனவுகளுடன் வாழ்கிற ஹீரோயின், காமெடிக்கு யோகிபாபு என படம் விறுவிறுப்பாக செல் கிறது.தெலுங்கு படமென்றாலும் அதன் தாக்கம் இல்லாமல் எடுத்து இருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ், படம் சொல்ல வரும் கருத்தும் செம. தமிழுக்கு அறிமுக இல்லாத புதுமுகங்கள் நடித்து இருப்பதே மைனஸ். மற்றபடி சிறந்த இயக்குனர், நல்ல டீம், நல்ல நடிகர்களால் இந்த படம் பிரண்ட்லியாக கவனிக்க வைக்கிறது.

டீரீம் கேர்ள்:

சினிமாவில் இயக்குனர் ஆக ஆசைப்படுகிறார் ஹீரோ ஜீவா, பாடகி ஆக ஆசைப்படுகிறார் ஹரிஷ்மிதா. இவர்கள் காதலிக்க இவர்கள் கனவு பலித்ததா என்பதை பேண்டசி கலந்த காதல் கதையாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி. ஒரு பெண்ணை நினைத்து பார்க்கிறார். அவரை நேரில் பார்க்கிறார்.

ஒரு விபத்தில் அவர் இறக்க, அவர் மீண்டும் வருகிறார். அப்போது என்ன நடக்கிறது என மாறுபட்ட திரைக்கரை. அதிக சினிமா தனம் இல்லாமல் இயல்பான பார்வையில் இந்த மாறுப்பட்ட படத்தை எடுத்து இருக்கிறார். அதுவே பிளஸ் ஆகவும், மைனஸ் ஆகவும் உள்ளது. ஹீரோ, ஹீரோ நடிப்பு, இந்த டிவிஸ்ட் கவனிக்க வைக்கிறது.

சிறப்பு செய்தியாளர்: மீனாட்சி சுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.