தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையேற்றத்தை உணர்த்தும் வகையில்
கோவையில் புதுமண தம்பதிக்கு தக்காளி, சின்ன வெங்காயம் அன்பளிப்பாக
வழங்கப்பட்டது.
அத்தியாவசிப்பொருட்களான தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை கடந்த சில தினங்களாக உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய் வரையிலும் சின்னவெங்காயம் 200 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் தக்காளி, மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம், மற்றும் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் புதுமண தம்பதிக்கு, விலையேற்றத்தை உணர்த்தும் விதமாக,தக்காளி மற்றும் சின்ன
வெங்காயத்தின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் மஹாலில் கணேஷ்-ஹேமா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் புதுமண தம்பதிகளுக்கு தக்காளியை அன்பளிப்பாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அதேபோல் மணமகனின் நண்பர்கள் சின்ன வெங்காயத்தை அன்பளிப்பாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதுமண தம்பதிக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் திருமண பரிசாக வழங்கப்பட்டது கடந்த சில நாட்களாக நிலவும் விலையேற்றத்தை சுட்டுவதோடு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.







